சென்னை: ஏசி மின் ரயிலை 12 நிலையங்களில் நிறுத்த திட்டம்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்பட உள்ள ஏசி மின்சார ரயிலுக்கு 12 நிறுத்தங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேக்காக 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. 

இதன்பேரில், முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு பிப்ரவரி 3-ஆம் வாரத்தில் வழங்கப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேர், நின்றுகொண்டு 3,798 பேர் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். 

இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் எப்போது இயக்கப்படும், கட்டண விவரங்கள் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. புறநகர் பாதையில் செல்லும்போது கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். 

பிரதான பாதையில் செல்லும்போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 நிலையங்களில் நின்று செல்லும். திங்கள் முதல் சனி வரை இந்த ரயில் சேவை இயக்கப்படும் என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி