சென்னை: தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்.. ரயில்வே

ரயில் பயணத்தின்போது, பயணிகள் அடையாள அட்டைக்கு ஆதாரை காண்பித்தால் அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தட்கல் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. அதாவது, தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ஆதார் எண் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதனை அடுத்து ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்ப்பு நடத்தப்பட்ட பிறகு பின்னர்தான் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்ற வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், ஆதார் எண் இணைக்கும் பயனருக்கு மற்ற பயனர்களைக் காட்டிலும் 10 நிமிடங்கள் முன்னுரிமை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முகவர்களால் கூட தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது. இந்த புதிய நடைமுறை இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ரயிலில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டை வேறு பெயரில் பதிவு செய்து, போலி ஆதார் அட்டைகளை தயார் செய்து தந்து, பயண ஏற்பாடுகளை ஏஜென்ட்கள் செய்வதாக ரயில்வே சந்தேகிக்கிறது. எனவே, ரயிலில் பயணம் செய்யும்போது, அடையாள அட்டையாக ஆதார் கொடுக்கும்பட்சத்தில், அதை ஸ்கேன் செய்து பரிசோதிக்க டிக்கெட் பரிசோதகர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி