தொழில் உரிமத்தை வரும் 31க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சிறு, குறு முதல் பெரிய வியாபார கடைகள் வரை இயங்கி வருகின்றன. இதில், 67, 000 கடைகள் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதற்குமுன், தொழில் உரிமம் பெற குறைந்தபட்சமாக, 500 ரூபாய் முதல், 10, 000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும், சிறிய கடைகள், உணவகங்கள், துணி கடைகள் உள்ளிட்டவை, தங்கள் கடைகளின் தன்மைக்கு ஏற்ப உரிமம் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பதற்கு பதிலாக, குறைந்தபட்ச கால இடைவெளி வழங்க வேண்டும் என, வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தொழில் உரிமத்திற்கான அவகாசம், ஓராண்டில் இருந்து, மூன்றாண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. மேலும், பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சில தொழில்களுக்கு, 50 முதல் 100 சதவீதம் வரை தொழில் உரிம கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, வளர்ப்பு பிராணிகள், பறவைகள் கடைகளுக்கு, 20 ரூபாய் இருந்த தொழில் உரிம கட்டணம், 1, 500 முதல், 10, 000 ரூபாய் வரை என, பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தாண்டுக்கான தொழில் வரி புதுப்பித்தல் வரும் 31க்குள் முடிகிறது. எனவே, தொழில் உரிமத்தை புதுப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.