உச்சநீதிமன்றத்தின் உள்இட ஒதுக்கீடு தீர்ப்பு: ராமதாஸ் வரவேற்பு

பட்டியலினத்தவருக்கு சமூக நீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலின மக்களிடையே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; அந்த வகையில் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டியலினத்தவருக்கு சமூக நீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என 2022-ஆம் ஆண்டு வன்னியர் இடஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக நீதி சார்ந்த விவகாரங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு என மாநில அரசுகளின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்காமல் அனைத்துத் தரப்பினருக்கும் சமூக நீதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி