துணை முதல்வர் உதயநிதியின் தனி செயலராக பிரதீப் யாதவ் நியமனம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவில், கால்நடை, பால், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே. கோபால், உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். உயர் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், துணை முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் டான்ஜெட்கோ தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். அவர் கவனித்துவந்த பொறுப்புகளை ஐஏஎஸ் அதிகாரி பி. அமுதா கூடுதல் பொறுப்புகளாக கவனித்துக் கொள்வார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையர் இ. சுந்தரவள்ளி, கல்லூரி கல்வியியல் துறையின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். தமிழக அரசின் பொதுத் துறை இணை செயலர் பி. விஷ்ணு சந்திரன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

சமூகநலத்துறை ஆணையர் வி. அமுதவள்ளி, தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.

தொடர்புடைய செய்தி