அதிமுக சார்பில், ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிரணி செயலாளர் பா. வளர்மதி தலைமையில், மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் முன்னிலையில் சென்னை தரமணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து, எனது அறிவுறுத்தலின்படி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில் சென்னை, தரமணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கைது செய்துள்ள திமுக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் எண்ணமே எதிர்க்கட்சியின் குரல். அதை ஒடுக்கும் ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள். இது உறுதி என அவர் பதிவிட்டுள்ளார்.