சென்னை: சீமான் மீதான வழக்குகள்: ஒன்றாக சேர்த்து விசாரிக்க மறுப்பு

பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பெரியாரை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி தினமும் ஒரு காவல் நிலையத்தில் இருந்து சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் புகார்தாரர்கள் யார்? வழக்கு எண்களின் விவரங்கள் என்ன? உள்ளிட்டவை இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி, இந்த சூழலில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க இயலாது என மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி