இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பொதுமக்களிடமிருந்து எந்தெந்த வழியில் வரி வசூலிக்கலாம் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறதேயொழிய, பொதுமக்களின் நிதிச் சுமையை குறைப்பது பற்றி துளிகூட சிந்திப்பதில்லை. பொதுமக்களுக்கு நிம்மதியை உருவாக்கித் தரவேண்டிய ஓர் அரசு வழிப்பறிக் கொள்ளையர்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வகையில், தற்போது சென்னை மாநகராட்சியில் தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், விளையாட்டு பயிற்சி கட்டணம் ஆகியவற்றை உயர்த்த சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொழில் வரி என்பது தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஏழையெளியோர் செலுத்தக்கூடிய வரி. இந்த வரி, ஆறு மாதங்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் பெறுவோர்களுக்கு 45 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. அதாவது, குறைந்த வருமானம் பெறுவோருக்கு மட்டும் தொழில் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.