முருக பக்தர்கள் மாநாடு: விமர்சனத்துக்கு இந்து முன்னணி பதில்

முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சி தலைவர்கள் முயல்கிறார்கள் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் சாடியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள். முருகபக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது இந்து விரோத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்றோருக்கு அரசியல் மாநாடாகத் தெரிகிறது. கடந்த வருடம் கடவுள் இல்லை, முருகன் இல்லை, விநாயகர் இல்லை என்று இந்து கடவுள், இந்து வழிபாடு மட்டும் இல்லை என்று போலி நாத்திகம் பேசும் திமுக, முத்தமிழ் முருகன் மாநாடு என்று தங்கள் புகழ்பாடியபோது அது அரசியல் மாநாடாகத் தெரியவில்லையா? 

இந்துக்களை திசைத்திருப்பும் தீய சக்திகளுக்கு பாடம் புகட்ட இந்துக்கள் தன்னெழுச்சியாக மதுரை மாநாட்டுக்கு வாருங்கள் என அறைகூவல் விடுக்கிறோம். ஆகவே எதிர்வரும் ஜூன் 22, முருக பக்தர்கள் மாநாடு முருகனின் அருளால் மாபெரும் வெற்றி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி