இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உலக அமைதியை அச்சுறுத்தும் வகையில் ஈரான் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தியிருக்கும் இஸ்ரேலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு, இஸ்ரேல் நாட்டின் இந்த ராணுவத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஈரானின் அணுசக்தி சோதனைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஈரானின் முக்கிய நகரங்கள் மீதும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களின் மீதும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இதில் ஈரான் நாட்டைச் சேர்ந்த முக்கியமான அணு விஞ்ஞானிகளும், ராணுவத் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் அத்தகைய வலிமையை ஈரான் பெற்றுவிடக்கூடாது எனத் தடுப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு, இப்போதும் இஸ்ரேலை ஆதரிக்கும் வகையில் கள்ள மவுனம் காக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.