இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். சுமார் 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கின்றனர். ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையை காலத்தே வழங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என தாமதமாக வழங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஊக்கத்தொகையை 4 மாதமாக தமிழக அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதால் சாதாரண விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊக்கத்தொகையை உடனடியாக கொடுக்காத பட்சத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆவின் நிறுவன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ரூ.120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி, சுமார் 8 லட்சம் விவசாயிகளின் நலனை தமிழக அரசு காக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.