சென்னை: வேளாண் கடன்.. சிபில் ஸ்கோர் நடைமுறை கூடாது.. விவசாயிகள்

வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ். குணசேகரன் மற்றும் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL score) மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறிய நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக இவரது துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா என அறிய விழைகிறோம். வேளாண்மையில் ஏற்படும் இழப்பீட்டை சிபில் ஸ்கோர் அளவீட்டில் கணக்கிட்டு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தை முதலில் அமல்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரத் தரமும் சிபில் ஸ்கோர் வரம்பில் வந்துவிடும். 

இப்படியான நெருக்கடிகள் தீராத நிலையில் வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி