திருச்சி: தாயின் 14 பவுன் நகைகளை திருடிய மகன் கைது

திருச்சி திருவெறும்பூா் அருகே கீழக்கல்கண்டாா்கோட்டை கந்தசாமி நகரைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் யாகூப். இவரது மனைவி பரிதா (60). இவா்களது மகன் சதாம் உசேன் (40). பட்டயப் படிப்பு படித்துவிட்டு, சந்தையில் வேலை பாா்த்து வருகிறாா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு சுப நிகழ்ச்சிக்கு பரிதா தனது 24 பவுன் நகைகளை அணிந்து சென்றுவிட்டு, திரும்ப பீரோவில் வைத்துள்ளாா். கடந்த 5-ஆம் தேதி பீரோவைத் திறந்து பாா்த்தபோது, அதிலிருந்த 14 பவுன் நகைகளைக் காணவில்லை. இதுகுறித்து பரிதா அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இவரது வீட்டுக்கு வெளிநபா்கள் யாரும் வந்து செல்லாத நிலையில், வீட்டிலிருந்தவா்கள்தான் திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் நடத்திய விசாரணையில், முகமது உசேன் தனது வீட்டில் இருந்து நகைகளைத் திருடி, அடகு வைத்து, புதிய பைக் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், முகமது உசேனை நேற்று(அக்.8) கைது செய்து, அவா் அடகு வைத்திருந்த 14 பவுன் நகைகளை மீட்டனா். தொடா்ந்து அவரை திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடர்புடைய செய்தி