முசிறி: மாயமான மூதாட்டி 5 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா. பேட்டை வடுகர்தெருவை சேர்ந்தவர் நல்லம்மாள் (70). வயதான இந்த மூதாட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாயமானார். இவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் நல்லம்மாள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தா. பேட்டை கடைவீதி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தா. பேட்டை பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 பின்னர் துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி பார்த்தபோது ஒரு பெண்ணின் சடலம் கிடப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தா. பேட்டை போலீசார் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிறு பாலத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி பார்த்த போது உடல் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. இறந்து கிடந்த சடலம் நல்லம்மாள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நல்லம்மாள் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நல்லம்மாள் இறப்பு குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி