பெரம்பலூர்: ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ரூ 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பெரம்பலூர், சிறுவாச்சூர் ஆட்டுச் சந்தையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் ஒரு கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது. பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலையில் நடைபெறும். 

பிரதி வாரம் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில், பெரம்பலூர் மட்டுமல்லாமல் அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் இருந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் பல்லாயிரக்கணக்கில், போயர், தலைச்சேரி, மேச்சேரி, சென்னை சிவப்பு, ராமநாதபுரம் வெள்ளை, வேம்பூர், திருச்சி கருப்பு உள்ளிட்ட பல்வேறு வகை வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் விற்பனை நடைபெற்றதாக ஆட்டுச் சந்தை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் ஆடு வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி