பெரம்பலூர்: மாந்திரீகம் மூலம் வாலிபரை கொலை செய்ய திட்டம்

திருச்சி போலி சாமியாருடன் இணைந்து மாந்திரீகம் மூலம் வாலிபர் ஒருவரை கொலை செய்து விட்டு, அதனை விபத்து போல ஏற்பாடு செய்ய திட்டம் தீட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் முரசொலி மாறன் (22). இவர் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரகு என்ற போலி சாமியாரிடம், பெரம்பலூரை சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவர், முன் விரோதம் காரணமாக மாந்திரீகம் மூலம் என்னை கொலை செய்து விட்டு, விபத்தில் உயிர் இழந்தது போல நம்ப வைக்க வேண்டும் என்று கூறி, போலி சாமியாருக்கு வங்கி பண பரிவர்த்தனை மூலம் பணம் கொடுத்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து போலி சாமியார் எனது போட்டோவையும் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். எனவே என்னை கொலை செய்ய திட்டம் தீட்டிய, ரமேஷ் கிருஷ்ணன், மற்றும் போலி சாமியார் ரகு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் நகர போலீசார், போலி சாமியார் ரகு ஏற்கனவே சிறையில் உள்ளதால், ரமேஷ் கிருஷ்ணனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி