பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள ஒதியம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி(54). விவசாயியான இவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (பிப்.22) மாலை மது போதையில் வீட்டிற்கு வந்த முத்துசாமி அதே பகுதியில் இருந்த 11 வயது சிறுமியிடம் 500 ரூபாய் பணத்தைக் காட்டி தகாத வார்த்தைகளால் பேசி, பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முத்துசாமியை பிடித்து குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு மாற்றப்பட்டு, அவர்கள் போக்சோ சட்டப்பிரிவின் கீழ், முத்துசாமி மீது வழக்கு பதிந்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.