பெரம்பலூர்: கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் பள்ளி வாசல் அருகில் தனியார் திருமண மண்டப கட்டிடம், கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருமாந்துறை அருகே கீரனூர் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் ராதாகிருஷ்ணன், வயது 40, கொத்தனாரான இவர் கட்டிடத்தில் கொத்தனார் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் கட்டிடத்தின் முன்பக்க சுவரில் சிமென்ட் பூச்சு வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்போது அலுமினிய உலோகத்தால் ஆன மட்டப்பலகை கொண்டு பணிகளை மேற்கொண்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அலுமினிய மட்டப்பலகை கட்டிடத்தின் முன்பக்கமாக உள்ள மின்கம்பியில் மோதியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த கொத்தனார் ராதாகிருஷ்ணனை அருகில் இருந்த மற்ற கட்டிட தொழிலாளர்கள் உடனடியாக அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் ராதாகிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைத்து, அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொத்தனார் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், சக கட்டிட பணியாளர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி