அரியலூர்: நீர்நிலை புறம்போக்கை அகற்றும் போக்கை கைவிடுக

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சலுப்பை ஊராட்சிக்கு உட்பட்ட பட்டவர்த்தி கிராமத்தில் சர்வே எண் 155 அல்லி ஏரிக்கு உட்பட்ட நீர்நிலை புறம்போக்கில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 6 தலைமுறைகளாக குடிசை வீடுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற வருவாய்த்துறை மூலம் உத்தரவு ஆணை கடந்த 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தங்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் நீர்நிலை புறம்போக்கை அகற்றும் போக்கை கைவிட கோரி மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இன மக்கள் ஒன்றுசேர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

மேலும் அந்த மனுவில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறு தலைமுறைகளாக மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இன மக்களாக ஒரே இடத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், அதற்கான வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் புறம்போக்கு நிலத்தை அகற்றும் போக்கால் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், உரிய இடமும், வீடும் கொடுத்து உரிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி