சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாங்குடி கிராமத்தில் செங்கல் கால்வாய் நடத்துவதாக கூறி மணல் கொள்ளை அதிகம் நடப்பதாக கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாங்குடி பகுதியில் பல கால்வாய்கள் செயல்பட்டு வருவதாகவும், அங்கு பல மாதங்களாக அதிகம் மணல் கொள்ளை நடப்பதாகவும், இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் மாங்குடி கிராமத்தினர் பல முறை காவல் துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வக்குமார் தலைமையில் போலீசார் நேரடியாக ஆற்றுப்படுகையில் திடீரென சோதனையிட்டனர்.
அப்போது அங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளியதாக இதில் திருப்பத்துரை சேர்ந்த ராஜ் மகன் பிரகாஷ் (40), தர்மபுரியைச் சேர்ந்த அய்யாக்குட்டி மகன் கோபி (25), திருவண்ணாமலை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன் (32) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள், ஒரு ஜேசிபி எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.