சென்னை: ஆதரவற்ற விதவை சான்றிதழ்.. தமிழக அரசு அறிவிப்பு
ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதில் நடைமுறையில் பல பிரச்சினைகள் இருந்து வந்தன. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொறுத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் திரு. ராகேஷ் கக்காணி அவர்கள் சு வெங்கடேசனின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல; அவர்கள் இருந்தும் அவர்களால் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அணுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்றே பொருள்படும்," என்று தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த விளக்கத்திற்கு சு. வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.