வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்று (டிசம்பர் 20ஆம் தேதி) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 20.12.23 முதல் 06.03.26 வரை கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில், சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று மாலை 5.20 மணிக்கு சனி பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
மேஷம்: இதுவரை உங்கள் ராசிக்குப் 10ஆம் வீட்டில் அமர்ந்து எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய விடாமல் முட்டுக்கட்டைப் போட்ட சனிபகவான் இப்போது நகர்ந்து பாக்கியஸ்தானம் எனப்படும் 11ஆம் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார். சனிபகவான் கும்ப ராசியில் 20.12.23 முதல் 06.03.26 வரை சஞ்சரிக்க உள்ளார். இந்த அமைப்பு உங்களுக்கு அபரிமிதமான பலன்களை வழங்க இருக்கிறது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் விலகும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரிஷபம்: உங்கள் சப்தம-விரயாதிபதியான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 20.12.2023 முதல் 22.02.2024 வரை சனிபகவான் செல்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு வீடு, மனை சேரும் பாக்கியம் கைகூடும். திடீர் பணவரவு, திடீர் யோகங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய, வீடு, வாகன யோகம் அமையும். இந்தக் காலக்கட்டங்களில் நீங்கள் சற்று நிதானத்துடன் செயல்படவேண்டும். முக்கியமான
முடிவுகள் எடுக்கும் போது அவசரம் கூடாது. நன்கு சிந்தித்து செயல்படுவது பல்வேறு வழிகளில் நன்மை அளிக்கும்.
மிதுனம்: அஷ்டம சனியாக அமர்ந்து பாடாய்ப் படுத்திய சனிபகவான் இனி 9ஆம் இடம் எனும் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். சிக்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுபடும். அவப்பெயர் மாறி உங்களை உதாசீனம் செய்தவர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனதில் சாதிக்கும் வல்லமை பிறக்கும். புதிய வீடு வாங்கும் எண்ணமும் அதற்கேற்ற திட்டமும் தோன்றும்.
வேலை வாய்ப்பு அமைந்து பணவரவு உண்டாகும். தொழில் சிறந்து லாபம் உண்டாகும்.
கடகம்: இதுவரை கண்டக சனியாக மகரத்தில் இருந்து பலன் கொடுத்துகொண்டிருந்த சனிபகவான் அஷ்டம சனியாக தற்போது கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். அஷ்டம சனி ஆட்டிப்படைப்பாரோ என்ற பயம் வேண்டாம். சனிபகவான் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் சில நல்ல பலன்களும் ஏற்படும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. 2024ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு குருபகவான் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்குவார். அப்போது மலை போல் வந்த துன்பங்கள் எல்லாம் பனிபோல் விலகும்.
சிம்மம்: உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் அமர்ந்து பல நற்பலன்களை தந்த சனிபகவான் 7ஆம் வீட்டுக்கு வருவது நல்ல பலன்களைத் தராது. 20.12.23 முதல் 06.03.26 காலக்கட்டங்களில் கண்டக சனியாக சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் சிறிது எச்சரிக்கை அவசியம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறுக்கு வழிகளில் சென்று பணம் சம்பாதிக்க முயல வேண்டாம். இரவு நேரப் பயணங்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. சனிக்கிழமைகளில் ஆனைமுகனையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். கெடுபலன்கள் குறைந்து நிம்மதி பெருவீர்கள்.
கன்னி: உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்துக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலக்கட்டத்தில், உடல்நலனில் சற்றுக் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் ஏற்படலாம். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஏதேனும் காரணத்தால் அவ்வப்போது குடும்பத்தில் இருந்துவந்த சலசலப்புகள் முற்றிலும் விலகி, அமைதி நிலவும். கிடைக்காமல் இருந்த பணம் வந்து சேரும். வீடு தொடர்பாகவும் பழைய வாகனங்கள் தொடர்பாகவும் பராமரிப்புச் செலவுகள் வரலாம்.
துலாம்: 4ஆம் இடத்தில் அர்த்திராஷ்டம சனியாக நின்று அலைக்கழித்த சனிபகவான் 20.12.23 முதல் 5ஆம் இடம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மாற்றம் உங்கள் வாழ்வில் பல விதங்களிலும் நற்பலன்களை வாரிவழங்கும். சனிபகவான் உச்சமடையும் ராசி துலாம். எனவே அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும்போது நற்பலன்களே அதிகமாக இருக்கும். யோக பலன்களும் ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். சனிபகவான் உங்களின் 2, 7, 9 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் பேச்சில் கவனம் தேவை.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்ந்து பலவிதமான நற்பலன்களை வழங்கிய சனிபகவான் தற்போது 4ஆம் இடம் எனப்படும் அர்த்திராஷ்டம சனி என்னும் அனுகூலமற்ற நிலைக்கு பெயர்ச்சி ஆகிறார். விருச்சிக ராசிக்கு அலைச்சலைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்றாலும் மன
வலிமை அதிகரிக்கும். வேலைகளை முடிக்க ஒருமுறைக்கு இருமுறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். செலவுகளும் ஏற்படும். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதிலும் செலவுகள் கூடும்.
தனுசு: கடந்த எட்டரை ஆண்டுகளாக படுத்தியெடுத்த சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்துக்கு நகர்ந்து உங்களுக்கு விடுதலையைக் கொடுக்கிறார். சனிபகவான் 3,6,11 ஆகிய வீடுகளில் சஞ்சாரிக்கும்போது நற்பலன்களை வழங்குவார். பல பிரச்னைகளும் தீர்ந்து விடும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.
இழந்த செல்வம், பொருள் ஆகியவற்றை மீட்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள். சொத்து விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
மகரம்: ஜென்ம சனியாக உங்கள் ராசியில் அமர்ந்த சனிபகவான் இன்று விலகி கும்ப ராசிக்குள் செல்கிறார். இதுவரை என்னவெல்லாம் உங்களுக்குப் பிரச்னையாக இருந்ததோ அவை எல்லாம் மெல்ல மெல்ல விலகும். சுதந்திரமாக உணர்வீர்கள். உங்களின் பணப்பை நிரம்பும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். உங்களை உதாசீனம் செய்தவர்கள் வழிக்கு வருவார்கள். இனி உங்கள் நடவடிக்கை சற்று நிமிர்ந்த நன்னடையாக இருக்கும். புதிய முயற்சிகள் பலன் கொடுக்கும். தாயாருடன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நன்மை தரும்.
கும்பம்: இதுவரை உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் அமர்ந்து கெடுபலன்களை கொடுத்த சனிபகவான் தற்போது தங்கள் ராசிக்குள்ளேயே வந்து ஜென்ம சனியாக அமர்கிறார். இதனால் இன்னும் மோசமான பலன்களைத் தருவாரோ என்று கவலை வேண்டாம். சனி பகவான் உங்கள் ராசி நாதன். அவர் உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்று அமர்வதால் சுபத்துவமான பலன்களே கிடைக்கும் என்பதால் அச்சம் வேண்டாம். பிள்ளைகள் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள். திருமணம் ஆகிய சுபகாரியங்கள் கூடிவரும். புதுவீடு மனை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். உரிய கடன் வசதி கிடைக்கும்.
மீனம்: உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் அமர்ந்து பலவித நன்மைகளைக் கொடுத்து வந்த சனிபகவான் தற்போது 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. ஏழரைச் சனியால் என்ற நடக்குமோ என்ற கவலை வேண்டாம். ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவான் மீன ராசிக்கு நல்ல பலன்களையே தருவார். ராசிக்கு 12ஆம் இடம் என்பது மறைவு ஸ்தானம். அதில் சனி பகவான் மறைவது நன்மையையே கொடுக்கும். சனிபகவான் உங்களின் 2ஆம் வீடான தன குடும்ப லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள்.
லோக்கல் ஆப் சார்பாக நன்றி!
சனிப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர்
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்