சிவகாசி துர்க்கை பரமேஷ்வரி அம்மன் கோவில் வருடாபிஷேகம். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகேயுள்ளது பிரசித்தி பெற்ற துர்க்கை பரமேஷ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலின் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது. அதிகாலை யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பால்குடம் எடுத்த பக்தர்கள் முருகன் கோவில், சிவன் கோவில், கருப்பசுவாமி கோவில்களுக்கு சென்று வணங்கிவிட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து, துர்க்கை பரமேஷ்வரி அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.