முசிறி அருகே மது அருந்திய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகாயம் - போலீசிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது ஒருவருக்கு கை, கால் முறிவு. முசிறி அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன், முசிறி அடுத்த ஏவூர் மேலதெருவைச் சேர்ந்த மகேஷ், திருச்செங்கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ் மூன்று பேரும் நண்பர்கள் ஆவர். சம்பவத்தன்று மூன்று பேரும் காவிரி ஆற்றுப்பகுதியில் மது குடித்ததாகத் தெரிகிறது. அப்போது சேதுராமனுக்கும், சந்தோஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் மகேஷ், சந்தோஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்ததில் சேதுராமனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேதுராமன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மகேஷ் மற்றும் சந்தோஷை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது சேதுராமனை வெட்டுவதற்குப் பயன்படுத்திய இரும்புப் பட்டையை கைப்பற்ற போலீசார் மகேசை அழைத்துச்சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றதாகத் தெரிகிறது. அப்போது காவிரி ஆற்றில் உள்ள நீர் ஏற்றுப் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் வாலிபர் மகேசிற்கு இடது கால் மற்றும் இடது கையில் முறிவு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மகேசை கைது செய்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.