சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி முடித்து விடுதிக்கு திரும்பிய பெண் பயிற்சி மருத்துவர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து பின்னால் துணியை முகத்தில் போட்டு மூடி தாக்குதலில் ஈடுபட்டார். பெண் மருத்துவர் கூச்சலிட்டதில் சக மருத்துவர்கள் அங்கு கூடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடம் வந்த எஸ்.பி ஆஷித் ராவத் பெண் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் நேற்று (மார்ச் 27) பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாக சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் 20 வயதான சந்தோஷை கைது செய்தனர். மேலும் சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அந்நேரம் பெண் பயிற்சி மருத்துவர் தனியாக நடந்து செல்வதை பார்த்து அவரைப் பின்தொடர்ந்து சென்று அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.