புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே எம். இராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி(37). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 12 வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இருந்த நிலையில், இந்திராணிக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த முருகனுக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
முருகன் எம். இராசியமங்கலத்திலேயே தங்கி இருந்து இந்திராணியோடு குடும்பம் நடத்தி வந்தார். இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இன்று இந்திராணிக்கும் அவரது கணவர் முருகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த முருகன் இந்திராணியை அரிவாளால் கை மற்றும் தலையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில், முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தின் போது தாக்குதலைத் தடுக்க வந்த இந்திராணியின் தாயாருக்கும் அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்து ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஆலங்குடி போலீசார் இந்திராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான கணவர் முருகன் ஆலங்குடி காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார்.