கோவை, ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து உடற்பயிற்சி உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில், அரசியல் சூழ்நிலை தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்தால் போதும் மற்ற காலகட்டங்களில், இறப்புகளுக்கு போவது போன்றவைகளை வைத்து தான் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பார்க்கில் இன்றைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கிறது, குறைந்தபட்சம் இங்கு இருக்கக்கூடிய மரங்களிலிருந்து விழுந்து இருக்கக்கூடிய சருகுகள், இலைகள் இவற்றையெல்லாம் அகற்றி கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய மனநிலை கூட இந்த மாநகராட்சிக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.
இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கோ கட்சி சார்ந்ததோ அல்ல. இந்த பகுதியைச் சேர்ந்த அத்தனை மக்களுக்கும் பொதுவான நிகழ்ச்சி. இதுபோன்ற தவறுகளை மாநகராட்சி எதிர்காலத்தில் செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து என்று கூறினார்.