மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மாலை கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பிறகு பிப்ரவரி 26 ஆம் தேதி காலை பீளமேடு அருகே எல்லை தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைக்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி கோவை மாவட்ட பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே பாஜக அலுவலகம் திறப்புக்குப் பின்னர் அங்கு திரளும் பாஜகவினர் மத்தியில் அமைச்சர் உரையாற்ற உள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தலும் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. கோவையில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய அலுவலகம் இரண்டு மாடி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கூட்ட அரங்கமும் சிறிய அளவில் மற்றொரு கூட்ட அரங்கமும், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறை என தனியாகவும் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.