இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து, பெண்களை ஏமாற்றுகின்றனர் என்று பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 6-வது சர்வதேச மற்றும் 45-வது இந்திய குற்றவியல் மாநாட்டில் பங்கேற்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, தகவல் தொழில்நுட்பத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியதாவது, பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறைவதாகவில்லை. பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு பெண்கள் உள்ளாகின்றனர். பொதுவெளி, கல்விக்கூடம், பணிபுரியும் இடம், ஏன் வீடுகளில்கூட பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இணையத்தில் பயணிப்பவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து, போலி முகவரி, போலி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து, பெண்களை ஏமாற்றுகின்றனர்.
இணையத்தில் உண்மை முகம் தெரியாததால், குற்றம் செய்பவர்களுக்கு அதுவே மிகப் பெரிய பலமாக, ஆயுதமாக அமைந்துவிடுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நம்பிக்கையை, தைரியத்தை கற்றுக்கொடுப்பதே இதற்குத் தீர்வு. மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படக்கூடாது என்ற தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். குடும்பம், சட்டம் மற்றும் காவல், நீதிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு அரணாக துணை நிற்க வேண்டும். காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்தார்.