2 கோடி மதிப்பிலான 41 கார்களை பறிமுதல் செய்த போலீஸ்!

80பார்த்தது
வேலூர் காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா (எ) தேவக்குமார் (41). இவர் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் கார் மெக்கானிக் செட் வைத்துள்ளார். இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காரை திருடி வரும் திருடர்களிடமிருந்து திருட்டு காரை வாங்கி இரவோடு இரவாக பிரித்து உதிரி பாகங்களை விற்று வந்துள்ளார். மேலும் சில நல்ல நிலையில் உள்ள கார்களை போலியான நம்பர் பிளேட்டை வைத்து விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இது குறித்து காட்பாடி காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேவகுமார் வைத்துள்ள கார் ஷெட்டில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சோதனை செய்தனர். அப்போது ஷெட்டு முழுவதும் கார்களின் உதிரி பாகங்கள் குவிந்து கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் திருட்டு கார்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாத 41 திருட்டு கார்களும், உதிரி பாகமாக 27 கார்கள் கண்டுபிடித்து பரிமுதல் செய்தனர். செட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 41 கார்களின் மதிப்பு சுமார் 2 கோடி என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் தேவகுமாரை கைது செய்த போலீசார் காட்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி