திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், திருவண்ணாமலை-வேலூா் சாலை அருகே அரசின் ஒருங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு நெல் மூட்டைகளை வைக்க 10-க்கும் மேற்பட்ட கிடங்குகள்
அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பெரிய அளவிலான நெல்களமும் உள்ளது.
இந்த ஒருங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு
போளூா், செங்குணம், மாம்பட்டு, மட்டபிறையூா், மண்டகொளத்தூா் என பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனர்.
மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் திறந்த வெளியிலும் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், மூட்டைகளை எடைபோடுபவா்கள் குறைந்த அளவே உள்ளதால், வியாபாரிகள் விலை கூறிய நெல் மூட்டைகளை எடை போட முடியாமல் உள்ளது.
இதனால் கூடுதலாக எடைபோட ஆள்களை பணியில் அமா்த்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தாமோதரனிடம் கேட்டபோது, எடை ஆள்கள் போதியளவு இல்லாததாலும், வியாபாரிகள் உடனடியாக எடைபோட்ட நெல் மூட்டைகளை வெளியில் எடுக்காமலும் உள்ளதாலும் மூட்டைகள் தேங்கி யுள்ளன.
எனவே, வியாழக்கிழமை (ஜன. 4) ஒரு நாள் மட்டும் நெல் எடுக்க விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை எடைபோட்டுவிட முடியும் எனத் தெரிவித்தாா்.