நெல்லை- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து: நீடிப்பு!

4528பார்த்தது
நெல்லை- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து: நீடிப்பு!
நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.


இதனால் செய்துங்க நல்லூர் ரயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரை யிலான ரயில்வே தண்ட வாளம் பகுதியில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.


ரயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர், தாதன்குளம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதிகளில் இரவு பகலாக ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ரயில்வே தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களும் நாளை (31-ஆம் தேதி) வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.


இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் ரயில்கள் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 5-ஆம் தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :