தஞ்சையில் மூத்த குடிமக்கள் நல சங்கம் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் ஆதி. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார் மாவட்ட துணை செயலாளர் துரை. கோவிந்தராஜ் வரவேற்றார். பொதுச் செயலாளர் பாஸ்கரன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் கண்டிமுத்து வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகருக்கு, வள்ளுவருக்கு கோயில் அமைத்த வையத் திருச்செம்மல் என்ற விருதை எம்விகே மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பாரதிமோகன்
வழங்கினார்.
தஞ்சை மாநகராட்சி எல்லையை சுற்றி உள்ள பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணிகளை சரிவர செய்து துாய்மையை பராமரிக்க வேண்டும். நாஞ்சிக்கோட்டை இபி காலனி வழியாக கெஜலட்சுமி நகர், காவேரி நகர் வழியாக புதிய
பேருந்து நிலையம் செல்ல தொடர்ச்சியாக மினி பேருந்துகளை இயக்க வேண்டும் அல்லது அரசு நகர பேருந்து வசதி செய்திட வேண்டும். தஞ்சை பெரிய கோயில் முன்புறமுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாலையைக் கடக்க நடைபாதை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணை தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.