பன்முகத் தளத்தில் தமிழ் வளர்ச்சி, வெவ்வேறு கோணங்களில் தமிழ் ஆராய்ச்சி என்னும் இரு குறிக்கோள்களை அடிப்படையாக வைத்து, இரண்டாவது உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டினை, சென்னை வளர்ச்சிக் கழகம், பன்னாட்டுத் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் ஆகிய நிறுவனங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்த உள்ளன.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் உலகநாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள பேராசிரியர்கள், அனைத்து நிலைக் கல்வியாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், தமிழ்க்கணினித் துறையினர், தமிழ் அமைப்புகள் மற்றும் இயல் இசை நாடகக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் நெறிகாட்டுதலில் நடைபெற்ற இதற்கான கலந்தாலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன், தமிழ் வளர்ச்சி கழகத்தலைவர் டாக்டர் வி. ஆர். எஸ் சம்பத், இந்திய வெளியுறவுத்துறை மேனாள் உயர் அலுவலர். வெ. மகாலிங்கம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவரும் இயக்குநருமான பேராசிரியர் சு. பாலசுப்ரமணியன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகப் புலத் தலைவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.