இடி, மின்னலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆட்சியர் தீபக் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
இடி சத்தம் கேட்டால் மின்னல் தாக்கும் அளவுக்கு அருகில் உள்ளீர்கள் என்பதை உணர வேண்டும். பயணங்களை தவிர்த்து முடிந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூட வேண்டும். வீட்டின் வெளிப்புறமுள்ள பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகள் உள்ளே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவையில்லாத மின்சாதனங்களின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
ஓடும் நீரில் அல்லது மழையில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். உலோக கட்டமைப்புகள், உலோகத்தாளுடன் கூடிய கட்டுமானங்கள் உள்ள இடங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும். மரங்களுக்கு அடியில் ஒதுங்க வேண்டாம். ஏனெனில் இவை மின்சாரத்தை எளிதில் கடத்தும். இடி, மின்னலின் போது சைக்கிள், மோட்டார் சைக்கிளில் சென்றால் உடனே இறங்கி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். படகு சவாரி அல்லது நீச்சல் பயிற்சி செய்து கொண்டிருந்தால் உடனே தரையில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
மின்னல் தாக்கியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். தேவையானால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.