தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பேசியதாவது: -
தஞ்சை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் தற்போதுவரை 43 ஆயிரத்து 670 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 52 ஆயிரம் எக்டேர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை நடப்பு குறுவை, சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தைசெயல்படுத்திட தஞ்சை 1-க்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனமும், தஞ்சை 2-க்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறுவை நெற்பயிருக்கு பயிர் காப்பீட்டு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 730 மட்டும் பொது சேவை மையங்கள் மூலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வருகிற 31-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
வேளாண் பொறியியல்துறை மூலமாக சி மற்றும் டி வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சி வாய்க்கால் தூர்வாரும் பணிகளுக்காக 367 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு 316 கிலோமீட்டர் நீளம் தூர்வாரப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டில் தஞ்சை மற்றும் அந்த கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 23 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6, 345 டன் உரங்கள் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.