பேராவூரணி அருகே மரக்கன்றுகள் நடவு துவக்க விழா

63பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி காப்புக்காடு (மத்திய நாற்றங்கால் பண்ணை) பகுதியில் தமிழ்நாடு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம் சார்பில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு துவக்க விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.  

பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ. எஸ். சந்திரசேகரன் வரவேற்றார். செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தங்க. ராமஜெயம், செருவாவிடுதி வடக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி. விஜயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமை வகித்தார். அவர் பேசுகையில், "பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு வனத்துறை சார்பில், லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சை வனக்கோட்டத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகளும், அவற்றில் பட்டுக்கோட்டை வனச்சரகத்தில் மட்டும் 70 ஆயிரம் மரக்கன்றுகளும் வனத்துறை மத்திய நாற்றங்கால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சுற்று வட்டாரத்தில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன" என்றார். பின்னர் செருவாவிடுதி காப்புக்காடு பகுதியில் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி