பார்லிமென்ட் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவும், 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் கோலப் போட்டிகள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லுாரியில் நடந்தது. கோலப்போட்டியில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைய தலை முறையை சேர்ந்த மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று வித விதமான வண்ணங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய வண்ண வண்ண கோலங்களை வரைந்து தங்களது திறமையை வெளிக்காட்டினர். கல்லுாரி முதல்வர் ஜான்பீட்டர், என்எஸ்எஸ் அலுவலர் கீதா உள்ளிட்ட பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் கோலப்போட்டியை பார்வையிட்டு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார். போட்டியில் கோலங்களை வரைந்த மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான வண்ணப்புடவைகள் பரிசாக வழங்கப்பட்டது கோலங்களை வரைய, வண்ணம் தீட்ட உதவிய மாணவிகளுக்கும் புத்தாடைகள் ஊக்கப்பரிசுகளாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.