தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார் (37). நெடுஞ்சாலைத் துறையில் தற்காலிகமாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். மதியம் தேநீர் குடிப்பதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் காலனியில் உள்ள ஒரு கடைக்கு சென்றபோது, அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நரேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து
அவரதுமனைவி அனுஷ்யா புகாரின் பேரில் மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நரேஷ்குமார் கடன் தொல்லையால் விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.