சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகள் குறித்தும், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கும் பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீடுகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகள் போன்ற திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: - கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஒன்றியத்தில் 429 வீடுகளும், கொளத்தூர் ஒன்றியத்தில் 379 வீடுகளும், எடப்பாடி ஒன்றியத்தில் 335 வீடுகளும், தலைவாசல் ஒன்றியத்தில் 279 வீடுகளும், ஆத்தூர் ஒன்றியத்தில் 190 வீடுகளும் என மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டுவதற்கு 2024-25-ம் நிதி ஆண்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துப் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.