மேட்டூர் அருகே தமிழக எல்லையில் சோதனைச் சாவடி அமைப்பது குறித்து சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர் அருகே தமிழக எல்லையான பாலாற்றில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையில் சோதனைச் சாவடி இல்லாததால் வனப்பகுதியில் இருந்து கனிம வள கொள்ளை, மரக் கடத்தல், காட்டு விலங்குகள் வேட்டை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இவனை தடுக்க தமிழக எல்லையில் உள்ள பாலாற்றில் வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில் சோதனை சாவடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அடுத்து இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கா ஆகியோர் தலைமையில் வந்த அரசு அதிகாரிகள் தமிழக எல்லையான பாலாற்றில் சோதனை சாவடி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சோதனைச் சாவடி அமையும் இடம் ஈரோடு வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் சோதனை சாவடி அமைப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில் இணைந்து சோதனை சாவடி அமைக்கலாமா அல்லது தனித்தனியாக என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல்துறை, வனத்துறை , வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.