சலூனில் முடிவெட்டிய பாமக எம்எல்ஏவின் மகன் காது கிழிப்பு

7638பார்த்தது
சலூனில் முடிவெட்டிய பாமக எம்எல்ஏவின் மகன் காது கிழிப்பு
சேலத்தில் சலூனில் முடி வெட்டியபோது பாமக எம்எல்ஏவின் மகன் காது கிழிந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏவாக இருப்பவர் அருள். இவரது மகன் ரவிதாஸ் (22). இவர் கடந்த 1ம் தேதி சூரமங்கலம் தனியார் கல்லூரி எதிரே உள்ள சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றார். அப்போது, முடி வெட்டியவர் வைத்திருந்த சேவிங் செய்யும் கத்தி ரவிதாஸின் காது பக்கத்தில் கிழித்தது. இதனால் ரத்தம் வெளியேறியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரவிதாசை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு இரண்டு தையல் போடப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதுபற்றி அருள் எம்எல்ஏவின் தம்பி சிவக்குமார், சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சலூன் கடையில் பணியாற்றி வரும் மேற்குவங்கத்தை சேர்ந்த தர்சன்ராய் என்பவர் முடி வெட்டியபோது இச்சம்பவம் நடந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அதில், முடி வெட்டிய போது தெரியாமல் பட்டு விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். தெரியாமல் பட்டது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி