ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முனியப்பசாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் சித்திரை மாத பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் மதுரை, ராமநாதபுரம் , புதுக்கோட்டை தூத்துக்குடி திருச்சி, சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் 110க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வொரு காளைகளாக பங்கேற்றன. 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களம் இறங்கி காளைகளை அடக்கினர். ஒவ்வொரு காளைகளுக்கு 20 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டு களம் கண்டன.
இதில் தன்னை அடக்க வந்த காளையர்களை சீறிப்பாய்ந்து மிரட்டி ஒருசில காளைகள் பந்தாடின. சில காளைகளை வீரர்கள் பாய்ந்து அடக்கினர். வடமாடு மஞ்சுவிரட்டில் பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை மல்லுக்கட்டி அடக்கிய வீரர்களுக்கும் பணமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.