நாகை நாகூர் மெயின் ரோடு பகுதியில் காடம்பாடி என்ற இடத்தில் நேற்று பாஜக வேட்பாளர் ரமேஷ் வாக்கு சேகரிக்க சென்றபோது கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து அவரை வரவேற்றுள்ளனர். சிதறிய தீப்பொறி அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் பட்டு தீ பிடித்தது தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த ஆவணங்கள், தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சி நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகா கட்சி பிரமுகர்களுடன் நேரடியாக சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தினை பார்வைவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், தமிழக அரசு கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கெல்லாம் 10,000 நிவாரணம் அளித்தது. இப்போது தீ விபத்தால் இருக்க இடம், உண்ண உணவு உடுத்த உடை எல்லாம் தெரிந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் தேர்தல் முடிந்தவுடன் இதுதொடர்பாக சீமானிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நாகை மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.