பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றுதலுடன் துவங்க உள்ளது. இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். இதில் பூசம் நட்சத்திரத்தன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகை தருவார்கள். இதற்கான பக்தர்களுக்கு குடிநீர், தங்கும் இடங்கள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பழனி திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.