மதுரையில் மாணவனுக்கு கொடுத்த வாக்கை அமைச்சர் நிறைவேற்றினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைப்பற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு வந்த போது 7ஆம் வகுப்பு மாணவன் விஷ்வா, "மயக்கம் வருகிறது" என்று கண்ணை மூடினார். அதை கவனித்த அமைச்சர், அந்த மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூறினார். மாணவன் வீட்டுக்கு குழந்தை நல மருத்துவர் மற்றும் டயட்டிசியன்களை அனுப்பி பரிசோதனை செய்ய கேட்டுக்கொண்டார். பின்பு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் செய்தபோது அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரிந்தது.
ஒரு நாள் விஷ்வாவை தனது இல்லத்துக்கு அழைத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது விஷ்வா, விளையாட்டாக சைக்கிள் வேண்டுமென கேட்டுள்ளார். உடனே அமைச்சர், "உனது உடல் எடை வெறும் 23 கிலோ மட்டுமே உள்ளது. சைக்கிள் ஓட்ட பலம் வேண்டாமா? 30 கிலோவாக எடையை உயர்த்திக் கொண்டு வா. உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" எனக் கூறியுள்ளார்.
கடந்த 11 மாதங்களாக மாணவனுக்கு பழங்கள், மருந்துகள், ஊட்டச்சத்து பானங்களை கொடுத்தனுப்பி பராமரித்து வந்துள்ளார். வாரம்தோறும் விஷ்வா தனது எடையை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்-ல் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போது மாணவன் விஷ்வா 30 கிலோ எடையை எட்டியதால் அவருக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து அமைச்சர் சர்பிரைஸ் செய்துள்ளார்.