செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கடந்த மாதம் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் வழியில் வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணாநகர் காவல்துறையினர் டிடிஎப் வாசன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 6ஆவது நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டிடிஎப் வாசன் மன்னிப்பு கோரியதால், அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து 10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் டிடிஎப் வாசன் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக மதுரை அண்ணாநகர் காவல்துறை நோட்டீஸ் கொடுத்தனர். கடந்த 3ம் தேதி காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறையிடம் 2 நாட்கள் அவகாசம் கோரி இருந்தார்.
இந்த நிலையில் இன்று (05.06.2024) தனது செல்போனை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் டிடிஎப் வாசன் ஒப்படைத்தார்.