மதுரையில் இரும்புத் தொழிற்சாலையில் அரைவை இயந்திரம் வெடித்துச் சிதறியதில் தந்தை, மகன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை சாமநத்தம் புலியூர் மேற்குத் தெருவைச் சேர்ந்த ராமு (46). இவரது மகன் சுந்தர் (24) ஆகிய இருவரும் சிந்தாமணி ராஜமான் நகரில் உள்ள இரும்பு அரைவைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல இருவரும் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது, அலுமினியம், பித்தளை கலந்த மண்ணை அரைத்துத் தருமாறு அவர்களிடம் உரிமையாளர்கள் கொடுத்துள்ளார். ஆனால், அவை அளவில் பெரிதாக இருந்ததால், அரைக்கும் போது பிரச்னை ஏற்படும் என்று ராமுவும், அவரது மகன் சுந்தரும் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அவற்றை அரைத்துத் தருமாறு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தக் கலவையை அரைக்க முயன்ற போது, அரைவை இயந்திரத்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. இதில் அலுமினிய துகள்கள் ராமு உடல் முழுவதும் பட்டு தீக்காயமடைந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற மகன் சுந்தருக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு, எல்லீஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர்கள் இளங்கோவன், தமிழரசன் மீது வழக்குப் பதிந்து கீரைத்துறை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.