கன்னியாகுமரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. தற்போது வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ரமலான் நோன்பு நடைபெற்று வரும் நிலையில் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் இரு தரப்பினிடையே கடந்த சில நாட்கள் முன்பு பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், மீண்டும் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்லாலும் கையாலும் கொடூரமாக போலீசார் கண் முன்பே தாக்கி கொண்டனர். ஆண்கள் ஒருபுறம் தாக்கிக் கொள்ள அதற்கு இணையாக பெண்களும் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பிலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்கும் ஒரு தரப்பினர் முற்பட்டனர். இதை அடுத்து அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் 15-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.