இந்த ஆண்டுக்கான ஓணம் கொண்டாட்டம் அத்தம் நட்சத்திரமான இன்று (செப்.,6) தொடங்கியது. வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவோணம் கொண்டாட்டம் நடக்கிறது. குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
3அதே வேளை இந்த ஆண்டு கேரளாவில் வயநாடு நிலச்சரிவால் ஏராளம் உயிரிழப்பு ஏற்பட்டதால், கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட வேண்டும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பத்மநாபுரம் அரண்மனையிலும் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் ஏற்பாட்டின் படி ஓண விழா எளிமையாக தொடங்கப்பட்டது.
இதையடுத்து அரண்மனை ஊழியர்கள் காலையில் அரண்மனை வளாகத்தில் வண்ண வண்ண மலர்களால் அத்தப் பூ கோலமிட்டனர். அரண்மனையில் பல இடங்களில் பூக்களால் அலங்கரித்தனர். மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஓண ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தனர். இதை இங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அதேபோல் ஓண ஊஞ்சலிலும் ஆடி மகிழ்ந்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் பத்மநாதபுரம் அரண்மனையில் நடைபெற உள்ளது.